கோவை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை,ஆப்-லைனில் நடத்துவதற்கு, ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆன்-லைனில் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஆன்-லைன் முறையில் நடத்தப்பட்ட நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை, ஆப்-லைன் வாயிலாக,நடத்துவதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க, விண்ணப்பித்துள்ளதால் இரண்டு நாட்கள் வரை, கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்ற நிலையில், ஆப்-லைன் வாயிலாக, கவுன்சிலிங் நடத்துவதாக, கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைன் வாயிலாக, கலந்தாய்வு நடத்தப்படும் பட்சத்தில், மற்ற மாவட்டங்களில் உள்ள காலி பணியிட வாய்ப்புகளை அறிந்துகொள்ள முடியும்; ஆப்-லைன் முறையில், கலந்தாய்வு நடத்தப்பட்டால்,குறிப்பிட்ட ஒரு மாவட்டத்துக்குள் உள்ள பணியிட வாய்ப்புகளை மட்டுமே அறிந்துகொள்ள முடியும்;மற்ற மாவட்டங்களில் இடமாறுதல் பெற விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று,கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
வரும் 3ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட பகுதிகளுக்குள், இடமாறுதல் என்பது, ஆப்-லைனில், நடப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், 4ம் தேதி, வெளிமாவட்டங்களுக்கான இடமாறுதலை, ஆப்-லைனில் நடத்தினால், ஆசிரியர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்; மற்ற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களை அறிந்து, கொள்ள முடியாது. இதில், தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனரிடமும், இதுபற்றி பேசினோம். தொடர்ந்து, 3ம் தேதி மாவட்டத்துக்குள் நடக்கவுள்ள ஆசிரியர் கலந்தாய்வை ஆப்-லைனில் நடத்தவும், 4ம் தேதி நடக்க உள்ள வெளிமாவட்டங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வை, ஆன்-லைனில் நடத்தி கொள்ளவும்,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்தார்.