எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவக்கம்!
சென்னை: அரசு மருத்துவக் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள், நேற்று துவங்கின. புதிய மாணவ, மாணவியரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மூத்த மாணவ, மாணவியர்,ராகிங் செய்யமாட்டோம் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தில், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி உட்பட, 21 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், மாநில ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் முதற்கட்ட கலந்தாய்வில் நிரம்பின. இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும்,முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., வகுப்புகள்,நேற்று துவங்கின.
சென்னை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வந்த புதிய மாணவ, மாணவியருக்கு, மூத்த மாணவர்கள்,பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், டாக்டர் கோட் கொடுத்து, வரவேற்பு அளிக்கப் பட்டது. அரசு மருத்துவக் கல்லுாரிகள் அனைத்திலும் மூத்த மாணவ, மாணவியர், ராகிங் செய்ய மாட்டோம் என, உறுதிமொழி எடுத்தனர்.
அறிவுரைகள் என்ன?
முதல்வர்கள் மற்றும் மூத்த பேராசிரியர்கள் புதிய மாணவ, மாணவியருக்கு கல்லுாரியின் பெருமைகளை விவரித்ததோடு அறிவுரைகளையும் வழங்கினர்.
- குடும்ப கஷ்டத்தை உணர்ந்து படிக்க வேண்டும்; டாக்டராகி சிறந்த சேவையாற்ற வாய்ப்பு உள்ளது;இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
- ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது. மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிவதுடன், இன் செய்ய வேண்டும்; ஷூ அணிய வேண்டும்
- மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும்;லெகிங்ஸ் அணிதல் கூடாது. தலைமுடியை விரித்து விட்டபடி வரக்கூடாது.
- ராகிங் பிரச்னைகள் இருந்தால் பெற்றோர் மூலமாகவோ, நேரடியாகவோ, டீனிடம் தகவல் தெரிவிக்கலாம்; பயம் வேண்டாம். ராகிங் புகாரில் சிக்கினால், கல்லுாரியை விட்டு அனுப்ப வேண்டி வரும். இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
- முன்பே துவக்கம் ஏன்?அரசு மருத்துவக் கல்லுாரிகளில், செப்., 1ல் தான், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும். இந்த ஆண்டு,முதற்கட்ட கலந்தாய்வில், மாநில ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பிவிட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தாமதமாகும் என்பதால் அதுவரை காத்திராமல், முன்கூட்டியே வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன என, மருத்துவக் கல்வி அதிகாரிகள் கூறினர்.
0 comments:
Post a Comment