அரசு கல்லுாரிகளில் வன்முறை நிகழ்ந்தால், மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டாம் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு கல்லுாரிகளில் மாணவர் சங்க தலைவர், துணைத் தலைவர் உட்பட, நிர்வாகிகளை தேர்வு செய்ய, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கண்டிப்பான உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை, தமிழகத்தில் பெரும்பாலான கல்லுாரிகளில் அமல்படுத்தவில்லை. சென்னை, மாநில கல்லுாரியில் மட்டுமே, ஜனநாயக முறைப்படி மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது.
இரு ஆண்டுகளுக்கு முன், தேர்தல் தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில்,மாணவர் ஒருவர் ஓட ஓட வெட்டப்பட்டார். மேலும், மாணவர்கள் கல்லுாரிக்கு வெளியே வந்து போராட்டம் நடத்தி, மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டம் நடந்த காமராஜர் சாலை, முதல்வர் வரும் வழி என்பதால், அவரது வாகனம் வருவதற்குள் போராட்டத்தை முடிக்க, போலீசார் திண்டாடினர்.
போலீஸ் அதிகாரிகளின் விசாரணை அறிக்கை அடிப்படையில், மாணவர் சங்க தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது; இரு ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தல் நடத்தக்கோரி மாணவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்ட கல்லுாரிகளிலும், வன்முறை ஏற்படும் நிலை இருந்தால், மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டாம்;ஒழுக்கமான, நன்றாக படிக்கும் மாணவர்களை நிர்வாகிகளாக நியமிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு, உயர் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
0 comments:
Post a Comment