கோவை: ’தினமலர்’ நாளிதழ், ’தேச பக்தன்’ அமைப்பு இணைந்து நடத்திய, ’ஒரு தேசம், ஒரு வாசகம்’ வாசகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் நேற்று வழங்கப்பட்டன.
தேசத்தின், 70வது சுதந்திர தினம் முன்னிட்டு, தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமான சிறந்த வாசகத்தை, ’வாட்ஸ் ஆப்’பில் அனுப்ப கோரியிருந்தோம். இந்த போட்டியை, இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, சிறுதுளி, ராக், லீட் இந்தியா - 2020, டாஸ்க், எடுதர்மா, யங் இண்டியன், வாசன் ஷெல்டர்ஸ், ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனங்களும் இணைந்து நடத்தின.
இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற, 15 ஆயிரம் வாசகர்கள், தமிழகத்தில் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் உணர்வுப்பூர்வமான வாசகங்களை ’வாட்ஸ் ஆப்’பிலும், கடிதம் மூலமாகவும் அனுப்பியிருந்தனர். சிறந்த வாசகங்களை, முதல் கட்டமாக பேரூர் தமிழ் கல்லூரியில், குழுவினர் தேர்வு செய்தனர்.
அடுத்ததாக, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா தலைமையிலான குழுவினர், தகுதியான வாசகங்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட வாசகங்களுக்கு பரிசளிப்பு விழா, கோவை, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ’தேச பக்தன்’ அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் நந்தகுமார் வரவேற்றார். திருப்பூர், வெற்றி அமைப்பின் நிறுவனர் சிவராம், ’சிறுதுளி’ நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ’இயகோகா’ சுப்ரமணியம் பேசினர்.
பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார், இந்திய தொழிற்கூட்டமைப்பின் தலைவர் வரதராஜன், இந்திய தொழில்வர்த்தக சபை தலைவர் நந்தகுமார், ஸ்ரீ ஆனந்தாஸ் நிர்வாக இயக்குனர் புருஷோத்தமன், லீட் இந்தியா அமைப்பின் செயலாளர் பத்மநாபன், சிறுதுளி உறுப்பினர் மணியன், வாசன் ஷெல்டர்ஸ் இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அதிவிரைவுப்படை - 105 பட்டாலியன், கமாண்டன்ட் ஜெயக்குமாருக்கு, ’தேசபக்தன்’ விருதை, ’தினமலர்’ இணை இயக்குனர் ஆ.லட்சுமிபதி வழங்கினார். சிறந்த என்.சி.சி., மாணவர்கள் மூன்று பேருக்கும் விருது வழங்கப்பட்டது.
முதல் பரிசு ரூ.1 லட்சம்!: சென்னை, ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த விஸ்வநாதன் சுப்ரமணியம் எழுதிய வாசகத்துக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப்பதக்கமும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த லுத்பியாவுக்கு இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கப்பதக்கமும், நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த ஆரோக்கியசாமிக்கு மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
தவிர, 67 பேருக்கு ஒரு கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
0 comments:
Post a Comment