சென்னை: தமிழக அரசு வழங்கும், ’டாக்டர் அப்துல்கலாம் விருது’ மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிக்கு, தமிழக அரசு வழங்கும், ’டாக்டர் அப்துல்கலாம் விருது’ சென்னையில் உள்ள, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி, சண்முகத்திற்கு கிடைத்துள்ளது. நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா, விருது வழங்கி பாராட்டினார்.
விருது கிடைத்தது குறித்து, சண்முகம் கூறியதாவது: குப்பையில் எரிசக்தி தயாரிக்க முடியும் என்ற கண்டுபிடிப்பிற்காக, இந்த விருது கிடைத்துள்ளது. திடக்கழிவு மக்களுக்கு நோயை விளைவிக்கும். இதில் இருந்து மீத்தேன், எரிசக்தி தயாரிப்பதன் மூலம், சுனாமி வருவதை தடுக்க முடியும் என, கண்டறிந்துள்ளேன். 20 ஆண்டுகளாக, தேசிய அளவில், திடக்கழிவில் இருந்து, எரிசக்தி தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
பஞ்சாப் மாநிலத்தில், காய்கறிக் கழிவில் இருந்து மீத்தேன் தயாரித்து, சிலிண்டரில் அடைத்து, வாகனங்களை இயக்க பயன்படுத்துகின்றனர். ஆசியாவிலே முதல் முறையாக, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தியது.
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 39 இடங்களில், திடக்கழிவில் இருந்து மீத்தேன், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி உள்ளார். அதற்கான அறிவியல் தொழில்நுட்பத்தை நான் வழங்கி உள்ளேன். முதல்வரிடம் விருது பெற்றது, மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இவ்வாறு சண்முகம் கூறினார்
0 comments:
Post a Comment